சன்மார்க்க ஆகாரம்
நெய் பால் தயிர் மோர் - இவைகளை ஆகாரத்தில் விசேஷம் சேர்ப்பது தேக நஷ்டம். மனிதர்களுக்கு எல்லாத் தாதுக்களிலும் முதல் தாது கொழுப்பு. அதன் சத்து நெய். அதை எடுத்தால் தேக நஷ்டம். இதுபோல் பசுக்களினது முதற்றாது நெய். ஆதலால் அதையெடுப்பது சுத்த சன்மார்க்க மரபல்ல. சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்து கொள்வதற்காவது புறப்புறவமுதம். ஆதலால், ஊற்றுநீர் பொற்றலைக் கரிசலாங்கண்ணி வாழை தென்னை முதலியவற்றின்மேல் பெய்கிற பனிசலம் மழைச்சலம் - இவைகள்தான் சுத்தசலம் அல்லது அமுதம். அல்லது சாதாரண ஜலமுங் கொள்ளலாம். அதாவது மேற்குறித்த ஜலத்தை 5-ல் 3, 5-ல் 2 பாகம் நிற்கக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் இவைகளைச் சேர்த்துக் குடிக்கலாம். இவைகள் தேகவிருத்தி செய்யும். சுத்த சன்மார்க்க மரபிற் குரியது இனிப்புத்தான். ஆதலால் தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம் இவைகளை ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது உத்தமம்.
உப்பு
தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.
சர்க்கரை
சர்க்கரை எந்தக் காலத்திலும் புழுத்தலின்றாகலி னுத்தமவாகாரமாம். மற்ற வஸ்துக்கள் எல்லாம் புழுக்கும்.
சன்மார்க்க ஆகார விலக்கு
சுத்த சன்மார்க்க சாத்தியர்கள் நெய் முதலிய வஸ்துக்கள் கொள்ளப்படாது. அதுபோல் சாதகர்களும்....ஒருவாறு கொள்ளப்படும். ஏனெனில், ஓர் தேகத்திலுள்ள தாதுக்களில் முதல்தாது கொழுப்பு, அதின் அம்சமே பால், அதின் அம்சம் நெய், மேற்படி ஆபாசம் மோர் தயிர். ஆதலால், மேற்படி கொழுப்பு வெளிப்பட்டால், மேற்படி பசுவின்கண் கெடுதியும் நேரும். ஆதலால் கொலை. கன்றுக்கு ஒருவாறு விட்டு பாலை கிரகிக்கலாம். ஆதலால், இஃதால் ஜீவ இம்சை நேருதலால், மேற்படி வஸ்துக்கள் கொள்ளலாகாது; நேராத பக்ஷத்தில் கொள்ளலாம்.
சாதம்
சாதம் வடித்துச் சாப்பிடுதல் நலமா, பொங்கிச் சாப்பிடுதல் நலமா எனில்:- வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது; தாமச குணம் உண்டாகும். இதுபோலவே உப்பு, புளி, மிளகாய் முதலிய வஸ்துக்களின் எண்ணெய் போகச்சுட வைத்துச் சாப்பிடுதல் வேண்டும். பச்சரிசி என்பது இப்போது கொண்டுவருவது அல்ல... மேலும் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடிய ஆகாரங்கள் கொள்ளுதல் வேண்டும்.
116. வெந்நீர்
அண்டத்தையும் பிண்டத்தையும் ஓருங்கே வளர்ப்பது புறப்புற அமுதம். ஆதலால் அஃதே கொள்ளல் வேண்டும். யாதெனில்:- ஊற்றுநீர், பொற்றலை, வாழை, தென்னை முதலியவற்றின் பேரிலுள்ள பனிஜலம், மழைஜலம் - இவைகள் கொள்ளலாம்; சாதாரண ஜலங்கொள்ளுவது கெடுதி. ஏனெனில் மேற்படி ஜலத்தில் மூன்று குணமுண்டு. எனைஎனில்: விஷம், பூதம், அமுதம். இம்மூன்று மொன்றாகவே இருக்கும். எப்படியெனில்: மேல்பாகத்தில் சிலிர்ப்பாகிய விஷமும், அதனடியில் ஏகதேசம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷ உஷ்ணமுள்ள அமுதமும் கூடி ஒன்றாயிருக்கும். மேற்படி ஜலத்தினது குணங்கள் ஆவன: பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும்; அமுதஜலம் பிராணசக்தி செய்யும்; விஷஜலம் தத்துவத்துரிசைப் போக்கும். ஆதலால் இடபேதத்தால் மேற்படி நீர்கள் தனித்தனியாகவுமுள்ளன; ஒவ்வொன்றில் மும்மூன்றாகவும் விரியும். ஆதலால், மேற்படி சுத்தாமுதங்கிடையாத பக்ஷத்தில் இதர ஜலங்களைப் பச்சையாகக் கொள்ளப்படாது; வெந்நீராகக் கொள்ளுதல் வேண்டும். அந்நீரும் ஐந்து மூன்றும் ஐந்து இரண்டுமாகக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் கற்கண்டு - இவைகள் சேர்த்துக் கொள்ளவும். நேராத பக்ஷத்தில், தென்னை நாயுருவி வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது, சூரிய கிரணத்தில் வைத்தாவது, சூரியசரத்தால் பார்த்தாவது, சிகரத்தை உன்னியாவது கொள்ளல் வேண்டுமேயல்லது பச்சையாய்க் கொள்ளப்படாது. சநிநீராடென்று சொல்வது சநி போன்ற கருமையான கருகியநீராலாடென்று சொன்னது. யாதெனில் வெந்நீர், ஒருவாறு ஊற்றுநீர். இதன்றி - மற்றப்படி - சொல்வது தெரியாமை.
வெந்நீர்
சுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல் வெந்நீராதலால். எக்காலத்தும் சுத்தஜலம் சேர்க்கக்கூடாது. பச்சை ஜலத்தினிடத்தில் மூன்று குணமுண்டு: விஷஜலம், பூதஜலம், அமுதஜலம். இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கும். ஜலத்தின் மேல் பாகத்தில் விஷமாகிய சிலிர்ப்பும், அதனடியில் கொஞ்சம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷம் சுடுகையுள்ள அமுதமுமாக இருக்கும். பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும். அமுதஜலம் பிராணவாயுவை விருத்தி செய்யும். விஷஜலம் ஆபாசநீர்களாகப் பற்றும். ஆதலால் பச்சைஜலம் கொள்ளப்படாது. வெந்நீர் நேரிடாத பக்ஷத்தில், சர்க்கரை நாயுருவி தென்னை வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது கொள்ள வேண்டும்.
குளிர்ந்த ஜலம்
காலங்கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக்கெடுதி. குளிக்க வேண்டுமானால் வெந்நீரில் குளிக்க வேண்டும்.
117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க - மேற்குறித்த மூலிகையால் - பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.
கரிசலாங்கண்ணியும் தூதுளையும்
கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்.
118. பஞ்ச கவ்யம்
பஞ்சகவ்வியத்தின் உண்மை யாதெனில்:- கோமயம், மேற்படி ஜலம், கிருதம், ததி, க்ஷீரம் இவை ஐந்து. இவற்றின் குணம்: மேற்படி மயத்தால் பிருதிவி சுத்தி, ஜலத்தால் ஜலசுத்தி, கிருதத்தால் அக்னி சுத்தி, ததியால் வாயுசுத்தி, பயசால் ஆகாசசுத்தி. இதுபோல் பிண்டத்தில் பிருதிவியாகிய தேகத்திலுள்ள குருக்களையும் அசுத்த மலங்களையும் மேற்படி மயம் போக்கும்; நீர்க்கட்டு கோவை முதலியவற்றை மேற்படி ஜலம் போக்கும்; உஷ்ண ஆபாசம் முதலியவற்றை மேற்படி கிருதம் போக்கும்; அதுபோல் வாயுவின் கெடுதியாகிய மலபந்த முதலியவற்றை மேற்படி ததிபோக்கும். ஆன்மாவாகிய பிராணச் சோர்வை மேற்படி க்ஷீரம் போக்கும்; மேலும் பசு மிருகத்தின் நக்ஷத்திர (?) விருக்ஷத்தின் மூலாதி பலங்களே பஞ்ச கவ்வியங்களாம்.
119. பஞ்ச சபை
ஆண்டவரிருக்கும் பொது ஸ்தானங்கள் 5. இவைகள் பஞ்ச சபைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
பிருதிவி - பொற்சபை
அப்பு - ரஜிதசபை
தேயு - தெய்வசபை
வாயு - நிருத்தசபை
ஆகாயம் - சிற்சபை
120. பஞ்ச அமுத ஸ்தானங்கள்
சுத்த அமுத ஸ்தானங்கள் 5.
1-வது அமுதம் நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போலிருக்கும்.
2-வது அமுதம் உள் நாக்குக்குமேல் இளகின இனிப்புள்ள சர்க்கரைப் பாகு போலிருக்கும்.
3-வது மூக்கு முனையில் காய்ச்சின சர்ப்பரைப் பாகு போலிருக்கும்.
4-வது நெற்றி நடுவில் முதிர்ந்த மணிக் கட்டியாகவிருக்கும்.
5-வது மகா இனிப்புள்ள மணிக் கட்டியாகவிருக்கும்; அதிக குளிர்ச்சியாகவுமிருக்கும்.
இந்த 5-வது அமுதத்தையுண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள்.
பஞ்ச அமுத ஸ்தானங்கள்
யோகானுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் 5.
1-வது அமுதம் நாக்கு நுனியில். பக்குவ ஞானத்தால். சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால்.
2-வது புவனாமுதம் - நாக்குமத்தியில், பக்குவ கிரியையால், ஸ்திதி பிரஞ்ஞை யுணர்ச்சியால்.
3-வது மண்டலாமிருதம் - நாக்கினடியில், பக்குவ இச்சை, சம்சார உணர்ச்சியால்.
4-வது ரகசியாமிருதம் - உள் நாக்கடியில், பக்குவ திரோபவம்.
5-வது மௌனாமிருதம் - உண்ணாக்கு மேல், பக்குவ அனுக்கிரகம். அனுக்கிரகம், சுபாவத்தினது அனுபவம், துரியநிலை.
121. ஏழு திரைகள்
இந்தப் பவுதிக உடம்பிலிருக்கிற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவன். ஷெ அணு கோடி சூரியப் பிரகாசமுடையது, லலாடஸ்தானமிருப்பிடம், கால்பங்கு பொன்மை முக்கால்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய 7 திரைகளுண்டு. அவையாவன:
கறுப்புத் திரை மாயாசத்தி.
நீலத்திரை கிரியாசத்தி.
பச்சைத்திரை பராசத்தி.
சிவப்புத்திரை இச்சாசத்தி.
பொன்மைத்திரை ஞானசத்தி.
வெண்மைத்திரை ஆதிசத்தி.
கலப்புத்திரை சிற்சத்தி.*
* கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பேருறு நீலப் பெருந்திரை அதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பச்சைத் திரையால் பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி செம்மைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி கலப்புத் திரையால் கருதனு பவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி - திருஅருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826
Comments